அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற பல எதார்த்தமான வாழ்வியலைப் பேசும் படங்களை இயக்கியவர் இயக்குனர் தங்கர் பச்சான். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சித்த மருத்துவர் கே.வீரபாபு இயக்கத்தில் “முடக்கறுத்தான்” திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் சமுத்திரக்கனி, மஹானா, சூப்பர் சுப்பராயன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய தங்கர்பச்சான் இப்படத்தைப் பற்றியும் படக்குழுவினரை பற்றியும் சில வார்த்தைகள் பேசிவிட்டு அடுத்ததாக தற்போது தமிழ் சினிமாவின் நிலை என்ன என்பது பற்றியும் பேசியுள்ளார். சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து நல்ல வசூலை பார்க்கும் படங்கள் மிகுந்த வன்முறை காட்சிகளோடும், கொலை, கொள்ளை மற்றும் ரத்தம் தெறிக்கும் படியான காட்சிகளும் கொண்டதாகவே அமைந்துள்ளதாகவும், இத்தகைய வன்முறைகளைத் தான் நம் குழந்தைகளும் பார்க்க நேரிடுகிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளார். படத்தில் பல கொலைகளை காட்சிப்படுத்தும் இயக்குனர்களும் கொலைகாரர்கள் தான் என்றும் அவர் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். இன்றைய சினிமா கலையாக அல்லாமல் வழிப்பறியாக மாறிவிட்டது, எதையாவது படமாக எடுத்து மக்களிடம் பணத்தை வசூலித்து விடலாம் என்ற மனநிலை வந்துவிட்டது. சமூகப் பொறுப்பில்லாத வன்முறையான படங்களால் இளைஞர்கள் மற்றும் சிறார்கள் மத்தியில் குற்றங்களும் பெருகிவிட்டன என்றும் வேதனையோடு பேசியுள்ளார்.