சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் நாளை (நவம்பர் 14) மிகப்பிரம்மாண்டமாக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாக இருக்கிறது. அதன்படி 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இதனை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையிலும் வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவியிலும் இந்த படம் உருவாகி இருக்கிறது. சூர்யாவின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக சொல்லப்படும் இந்த படத்தின் டிரைலரும், ரிலீஸ் ட்ரெய்லரும் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ளது. எனவே ரசிகர்கள் பலரும் இந்த படத்தை காண மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே டிக்கெட் முன்பதிவுகளிலும் பெரும்பாலான திரையரங்குகள் வேகமாக நிரம்பியுள்ளன. இதற்கிடையில் இந்த படத்திற்கு பல சிக்கல்கள் இருந்தன. எனவே இந்த படம் நாளை ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகம் பலரிடமும் இருந்து வந்தது. இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ப்யூவல் டெக்னாலஜி நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய 1.60 கோடி ரூபாயை செலுத்தியதோடு மற்றுமொரு வழக்கில் 6.41 கோடி ரூபாயையும் செலுத்திவிட்டது. மேலும் மீதமுள்ள தொகையை டிசம்பர் மாதத்திற்குள் செலுத்துவதாக உறுதியளித்துள்ள நிலையில் கங்குவா திரைப்படத்தை நாளை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தகவல் சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.