சிம்பு பிறந்த நாளில் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட் கொடுக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அடுத்தது இவர் தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த இரண்டு படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. ஆனால் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் நடிகர் சிம்பு, பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமீபகாலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் “அப்டேட்! அப்டேட்! அப்டேட்!” என பதிவிட்டிருந்தார். இதன் மூலம் சிம்புவின் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாக போகிறது என ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருந்தனர். அதன்படி தற்போது சிம்புவின் அடுத்த மூன்று படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என நடிகர் சிம்பு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். எனவே நடிகர் சிம்பு தன்னுடைய பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட் கொடுக்கப் போகிறார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் இப்பொழுதே கொண்டாட தயாராகி விட்டார்கள்.