Homeசெய்திகள்சினிமாடொவினோ தாமஸ் நடிக்கும் ஐடன்டிடி... படப்பிடிப்பில் பங்கேற்றார் த்ரிஷா...

டொவினோ தாமஸ் நடிக்கும் ஐடன்டிடி… படப்பிடிப்பில் பங்கேற்றார் த்ரிஷா…

-

மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் ஐடன்டிடி படத்தின் படப்பிடிப்பில் நடிகை த்ரிஷா பங்கேற்றார்.

கோலிவுட்டில் 21 ஆண்டுகளாக முன்னனி நடிகையாவும், ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் வலம் வருபவர் த்ரிஷா. தமிழ், தெலுங்கு, திரைப்படங்களில் நடித்து 20-களில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்த த்ரிஷாவுக்கு கடந்த சில வருடங்களாக அமைந்த திரைப்படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனால், கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் த்ரிஷாவுக்கு கோலிவுட் திரையுலகில் மீண்டும் ஒரு சிவப்பு கம்பளத்தை விரித்துக்கொடுத்தது. அழகும் அறிவும் ஒருசேர நிரம்பிய பெண்ணாக கோலிவுட் ரசிகர்களின் குந்தவையாகவே மாறிப்போனார் த்ரிஷா. பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த த்ரிஷா, அடுத்தடுத்து தி ரோடு, லியோ, விடாமுயற்சி படங்களின் மூலம் கோலிவுட்டில் விட்ட கொடியை பிடித்தார்.

தற்போது மலையாளத்திலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். அகில் பால் மற்றும் அனாஸ் கான் இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் ஃபாரன்ஸிக். டொவினோ தாமஸ், மம்தா மோகன்தாஸ் உள்பட பலர் நடித்திருந்த இத்திரைப்படம் அந்த ஆண்டின் வெற்றிப் படமாக அமைந்தது. இதையடுத்து, இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. அகில் பால்,அனஸ்கான் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் புதிய படத்திற்கு ஐடன்டிடி என தலைப்பு வைக்கப்பட்டது. ஆக்‌ஷன் திரில்லர் கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகிறது.

இப்படத்தில் நாயகி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில். த்ரிஷா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது படப்பிடிப்பில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷாவும், டொவினோ தாமஸூம் இணைந்து நடந்து செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நிவின் பாலியின் ஹே ஜூட், மோகன்லாலின் ராம் படத்தை தொடர்ந்து இப்படம் த்ரிஷா நடிக்கும் 3-வது மலையாள திரைப்படமாகும்.

MUST READ