நடிகை திரிஷா, சூர்யா 45 படத்தில் இணைந்திருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தினை ஆர் ஜே பாலாஜி இயக்கி வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சாய் அபியங்கர் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும் ஜிகே விஷ்ணு இந்த படத்தின் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்து வெளியானது. அதேசமயம் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிகை திரிஷா நடித்து வருவதாகவும் அவர் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. இருப்பினும் படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்றுடன் (டிசம்பர் 13) நடிகை திரிஷா திரைத்துறையில் நுழைந்து 22 வருடங்களை கடந்துள்ள நிலையில் அதே நாளில் நடிகை திரிஷா, சூர்யா 45 படத்தில் இணைந்திருப்பதை படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே சூர்யா மற்றும் திரிஷா ஆகிய இருவரும் இணைந்து மௌனம் பேசியதே, ஆறு ஆகிய படங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இந்த கூட்டணி புதிய படத்தில் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.