பிரபல இயக்குனரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் சிம்புவை வைத்து போடா போடி எனும் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. ஆனால் அதற்குப் பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரௌடி தான் படத்தை இயக்கினார். காமெடி கலந்த கேங்ஸ்டர் படமாக உருவான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி, நயன்தாரா இருவரும் நடிப்பில் ஒரு புறம் கலக்க மற்றொருபுறம் அனிருத் தன் இசை மற்றும் பாடல்கள் மூலம் படத்தை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தார். விஜய் சேதுபதியின் லிஸ்டில் நானும் ரௌடி தான் படம் மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் விக்னேஷ் சிவன். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதற்குப் பின்னர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வெற்றி பெற்றார். இப்படத்திற்கும் அனிருத்தின் இசை மிகப்பெரிய பக்கபலமாக அமைந்தது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்து நடிகர் அஜித்தை வைத்து படம் ஒன்று இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டு அஜித்தை இயக்கும் வாய்ப்பை மகிழ் திருமேனி தட்டி சென்றார்.
இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாகவும் அதற்கு பிரதீப் ரங்கநாதன் டேட்ஸ் கொடுத்ததையும் ஒரு வீடியோவாக வெளியிட்டனர். பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி திரைப்படமும், பின்னர் பிரதீப் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படமும் மாபெரும் வரவேற்பை பெற்றன. எனவே விக்னேஷ் சிவன், பிரதீப் கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது விக்னேஷ் சிவன், பிரதீப் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ் ஜே சூர்யா மற்றும் மிஷ்கின் ஆகியோர் தமிழ் சினிமாவில் தங்களுக்கான ஒரு தனி ஸ்டைலில் படங்களை இயக்கி வந்தனர். தற்போது இருவருமே பல படங்களில் வில்லன் ரோலில் நடித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் அனிருத் இதற்கு இசையமைக்கப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.