மஞ்சுமெல் பாய்ஸ் எனும் திரைப்படம் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி மலையாளத்தில் வெளியானது. இந்த படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கி இருந்தார். பரவா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு சுசின் சியாம் இசையமைத்திருந்தார். சைஜு ஹாலித் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் உருவாகி இருந்தது. இப்படம் வெளியான முதல் நாளிலிருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 50 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. அதேசமயம் மலையாள ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களிடையேயும் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் இப்படம் பல்வேறு தரப்பினரிடையை பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் அமைச்சரும் பிரபல நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். இது குறித்து உதயநிதி தனது சமூக வலைதள பக்கத்தில், சமீபத்தில் வெளியாகி பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வரும் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டியதாகவும் அதற்கு அவர்கள் நன்றி தெரிவித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் ஒளிப்பதிவு, பின்னணி இசை, திரைக்கதை, காட்சி அமைப்பு என அனைத்திலும் தரமான படைப்பை தந்த மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்து, அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.