கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் குமார் எழுதி இயக்கியிருந்த திரைப்படம் உறியடி. இந்த படத்தில் விஜய் குமாரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். அரசியல் பின்னணியில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து விஜய் குமார் உறியடி 2 திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். அதைத்தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பிறகு விஜய் குமார், ஃபைட் கிளப் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனமும் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்நிலையில் உறியடி விஜய் குமாரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு சேத்துமான் படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் தமிழ் இயக்கும் புதிய படத்தில் உறியடி விஜய் குமார் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ஃபைட் கிளப் படத்தை தயாரித்திருந்த ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க இருக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை (பிப்ரவரி 22 ) மாலை 6 மணி அளவில் வெளியிட இருப்பதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.