நடிகர் வடிவேலு மீண்டும் லேடி கெட்டப்பில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் வடிவேலு. இவர் ஏகப்பட்ட வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இருப்பினும் சமீபகாலமாக இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் மாமன்னன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மாரீசன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகும் கேங்கர்ஸ் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார் வடிவேலு. இந்த படத்தை சுந்தர். சி தானே இயக்கி நடித்து வருகிறார். இதில் வடிவேலு மற்றும் சுந்தர். சி-யுடன் இணைந்து கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது ரிலீஸுக்கு தயாராகி வரும் இந்த படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.
அதாவது இந்த படத்தில் நடிகர் வடிவேலு 5 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளாராம். அதிலும் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வடிவேலு லேடி கெட்டப்பில் தோன்றுவார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே வடிவேலு, பாட்டாளி, நகரம், தலைநகரம் போன்ற பல படங்களில் லேடி கெட்டப்பில் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் லேடி கெட்டப்பில் நடித்திருக்கும் தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.