பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமாரின் 39 ஆவது பிறந்தநாள் இன்று.
தமிழ் ரசிகர்களால் சுப்ரீம் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் சரத்குமார். இவருக்கும் இவரது முதல் மனைவி சாயாவுக்கும் பிறந்தவர்தான் வரலட்சுமி சரத்குமார். சினிமாவில் ஆர்வம் உடைய இவர் சில பல பயிற்சிகளை எடுத்துக்கொண்டு நடிப்புத் திறனை வளர்த்துக் கொண்டார். பின்னர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் நடிப்பதற்கு வரலட்சுமி சரத்குமாருக்கு வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் ஒரு சில காரணங்களால் சரத்குமார் மறுத்ததால் பாய்ஸ் படத்தில் வரலட்சுமியால் நடிக்க முடியாமல் போனது. தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதன் பின்னர் தான் கடந்த 2012 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தொடர்ந்து வந்த பல பட வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டார். அந்த வகையில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக தாரை தப்பட்டை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதேசமயம் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லியாகவும் நடித்து பெயர் பெற்றவர். போல்டான கேரக்டர் எதுவாக இருந்தாலும் அதில் சிறப்பாக நடித்து அசத்தி விடுவார். ஹீரோயின் வேடம்தான் வேண்டும் என்றில்லாமல் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன்படி கடைசியாக அனுமான் திரைப்படத்தில் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் 2024 கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரரான நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புது பெண்ணாக வரலட்சுமி சரத்குமார் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் பட்சத்தில் நாமும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம்.