சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விக்ரம். இவர் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். இவர் கடைசியாக பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும் , சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் விக்ரம். இந்த படத்திற்கு வீர தீர சூரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் விக்ரம் தவிர எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், சூரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, தென்காசி போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து சில தகவல்களை படத்தின் இயக்குனர் அருண்குமார் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “20ல் இருந்து 30 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்த படம் சித்தா படத்திலிருந்து வித்தியாசமான படமாகும். இது ஆக்சன் திரில்லர் படமாக இருந்தாலும் எமோஷனல் கலந்த கதைக்களம் ஆகும். சிறப்பான சினிமா அனுபவத்தை கொடுக்க நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். மேலும் சியான் விக்ரமிடமிருந்து நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன். சிறந்த கலைஞர் அவர். அவரிடமிருந்து நான் பணிவை கற்றுக் கொண்டேன். என்னுடைய ஸ்டைலில் என் படத்தை எடுக்க முழு சுதந்திரம் கொடுக்கும் அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்” என்று நடிகர் விக்ரமை பாராட்டியுள்ளார்.
- Advertisement -