விமல் நடிப்பில் இயக்குனர் எழில் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான தேசிங்கு ராஜா திரைப்படம் நல்லதொரு நகைச்சுவைப் படமாக மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் எழில் தொடக்க காலத்தில் விஜய் நடிப்பில் துள்ளாத மனமும் துள்ளும், அஜித் நடிப்பில் வெளியான “பூவெல்லாம் உன் வாசம்”, பிரபுதேவா நடித்த “பெண்ணின் மனதை தொட்டு”,ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “தீபாவளி”, என மென்மையான படங்களை இயக்கியவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து “மனம் கொத்தி பறவை” எனும் நகைச்சுவைப் படத்தை இயக்கி வெற்றியுடன் அடுத்த ரவுண்டுக்குத் தயாரானார். விமலும் அந்த காலகட்டத்தில் தொடர்ந்து நகைச்சுவைப் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து தேசிங்கு ராஜா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. விமலுக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார். சூரியும், ரவி மரியாவும் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு திரையரங்கமே சிரிப்பொலியில் நிரம்பியிருந்தது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா நடிக்கிறார்கள். மேலும் குக் வித் கோமாளி புகழ், ரவி மரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்க பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஆர் செல்வா ஒளிப்பதிவு செய்கிறார்.
தேசிங்கு ராஜா படத்தின் முதல் பாகமும் இரண்டாம் பாகமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் உருவாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது கடந்து படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கிறது. விமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் தேசிங்கு ராஜா 2 படமானது விமலுக்கு சிறந்த கம்பேக் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.