விமல் நடிப்பில் உருவாகியுள்ள சார் படத்தில் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் விமல் பசங்க திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதன் பின்னர் இவரது நடிப்பில் வெளியான களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி படமாக அமைந்தது. தற்போது இவர் போகுமிடம் வெகுதூரம் இல்லை, தேசிங்கு ராஜா 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் சார் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். ஆரம்பத்தில் இந்த படத்திற்கு மா.பொ.சி என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒரு சில காரணங்களால் படத்தின் தலைப்பை சார் என்று மாற்றினர் பட குழுவினர். இந்த படத்தை நடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். இந்த படத்தை கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனமும் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இனியன் ஜெ ஹரிஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். படத்தில் விமல் தவிர சாயாதேவி கண்ணன், சிராஜ், சரவணன், ரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் அதை தொடர்ந்து முதல் பாடலும் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் பூவாசனை எனும் இரண்டாவது பாடல் நாளை (ஜூலை 26) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். மேலும் விவேகாவின் வரிகளில் ஷான் ரோல்டன் பாடியுள்ள இந்த பாடலை நடிகர் அதர்வா மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.