இயக்குனர் வெங்கட் பிரபு, ரஜினியை இயக்கப் போவதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு, சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். கடைசியாக இவர் விஜய் நடிப்பில் கோட் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 430 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது. அடுத்தது இயக்குனர் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளார். இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது தொடர்ந்து பல படங்களை கமிட்டாகி வருவதால் அடுத்த ஆண்டின் இறுதியில் வெங்கட் பிரபுவிற்கு கால் ஷீட் தருவதாக கூறியிருக்கிறாராம். எனவே அதற்கிடையில் வெங்கட் பிரபு, புதிய படத்தை இயக்கி விடலாம் என்று திட்டமிட்டுள்ளாராம்.
அதன்படி வெங்கட் பிரபு ரஜினியை இயக்கப் போவதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. இனி வரும் நாட்களில் வெங்கட் பிரபு, ரஜினி கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
ரஜினி தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் நெல்சன், மாரி செல்வராஜ் ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் அந்த லிஸ்டில் இயக்குனர் வெங்கட் பிரபுவும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே கூலி படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி எந்த இயக்குனருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.