வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் தற்போது விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பாளராகவும் உருவெடுத்த நிலையில் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ஆர் ஜே விஜய், KPY பாலா, இர்ஃபான், குமாரவேல், மோனிகா, லீலா, வினோத் என பலரும் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை மீசைய முறுக்கு படத்தில் நடித்திருந்த ஆனந்த் எழுதி இயக்க ஏ ஹெச் காசிப் இசையமைத்திருக்கிறார். தமிழ்செல்வன் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க ஃபென்னி ஆலிவர் எடிட்டிங் பணிகளை கையாண்டுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.