இயக்குனர் வெற்றிமாறன் பல வருடங்களுக்கு முன்பாகவே நடிகர் ரவி மோகனுக்காக கதை எழுதி இருந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவரது இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன், விடுதலை, விடுதலை 2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இவர், சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தமாக இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் வெற்றிமாறன் கதையில் கௌதம் வாசுதேவ் மேனன் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதன்படி இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் ரவி மோகன் கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என கௌதம் மேனன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மற்றுமொரு பேட்டியில் பேசிய கௌதம் மேனன், “இந்த திட்டத்தைப் பற்றி நான், ரவி மோகன் மற்றும் வெற்றிமாறன் ஆகியோருடன் கலந்து பேசி இருக்கிறேன். இந்த திட்டம் ஏற்கனவே கடந்த 2012 – 13ஆம் ஆண்டில் வெற்றிமாறன், ரவி மோகனுக்காக எழுதி, இயக்க இருந்த திட்டம்தான் இது. தற்போது அவருடைய கதையில் நான் இந்த படத்தை இயக்கப் போகிறேன். வெற்றிமாறன் எழுதியிருந்த இந்த கதை இன்றைய காலகட்டத்திற்கும் தொடர்புடையதாக இருக்கும். எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.