சூப்பர் ஸ்டார் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படம் கிட்டத்தட்ட 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து ரஜினி நடித்துள்ள திரைப்படம் தான் வேட்டையன். ரஜினியின் 170 வது படமான இந்த படத்தினை ஜெய் பீம் படம் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் இந்த படம் உருவாகி இருக்கிறது. கதிர் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருந்த இந்த படம் இன்று (அக்டோபர் 10) தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை காண ரசிகர்கள் பலரும் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். படமானது தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் டிஜே ஞானவேல், துஷாரா விஜயன், அபிராமி, ரித்திகா சிங் உள்ளிட்டோர் வேட்டையன் படத்தில் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து ரோகினி திரையரங்கில் கண்டுகளித்துள்ளனர். மேலும் இதனை ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்துடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -