நடிகர் அஜித் தற்போது தனது 62 வது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் சம்பந்தமான அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதத்தில் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான நிலையில் அடுத்த சில மாதங்கள் கழித்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட பத்து மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் விடாமுயற்சி படப்பிடிப்பு முடித்த பாடில்லை. இதற்கிடையில் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி படப்பிடிப்புகளும் 2024 ஜூன் மாதத்தில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் விடாமுயற்சி படமானது 50% மட்டுமே நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் அங்கு ஏற்பட்ட பருவ நிலை மாற்றம் காரணமாக கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் அல்லது ஏப்ரல் மாத முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாகவும், விடாமுயற்சி பட குழு கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக மீண்டும் அஜர்பைதானுக்கே செல்ல இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதான் கடைசி கட்ட படப்பிடிப்பு என்று கூறப்படுகிறது. மேலும் இதில் ஆக்சன் காட்சிகளும் கார் சேசிங் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே படக்குழுவினர் விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு திட்டமிட்டபடி மே மாதத்தில் விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.