நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.
நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைக்கா நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை சுபாஸ்கரன் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அடுத்தது இந்த படத்தில் இருந்து முதல் பாடல் நாளை (டிசம்பர் 27) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித், விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. எனவே விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்புகளையும் நிறைவு செய்திருக்கும் நிலையில் விரைவில் இந்தப் படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கப்படும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நடிகர் அஜித் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கு முன்பாக குட் பேட் அக்லி படத்தில் தன்னுடைய டப்பிங் பணிகளை நிறைவு செய்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.