பிரபல நடிகர் விதார்த் நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் விதார்த் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். அந்த வகையில் மைனா, குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.
தற்போது இவர் சரத்குமாருடன் இணைந்து ‘சமரன்’ எனும் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை எம் 360 டிகிரி ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் திருமலை பாலுச்சாமி இயக்குகிறார்.
ராணுவ அதிகாரி மற்றும் ஐஏஎஸ் அதிகாரி இருவரையும் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை பின்னணியாக கொண்டு சஸ்பென்ஸ் படமாக உருவாகி வருகிறது.
அதே சமயத்தில் ‘விடியும் வரை காத்திரு’ எனும் திரைப்படத்தில் நடிகர் விக்ராந்துடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை ராட்சசன், கட்டாகுஸ்தி, உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சாஜி சலீம் இயக்குகிறார் .
இதைத்தொடர்ந்து விதார்த் தற்போது மீண்டும் சாஜி சலீம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘லாந்தர்’ என்று தலைப்பிடப்பட்ட இந்த படத்தில் விதார்த்துடன் சுவேதா டோரத்தி, சஹானா கௌடா, விபின் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.
இப்படம் திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பத்ரியின்,எம் சினிமா என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாக உள்ளது. இதற்கு சந்தோஷ் நாராயணனிடம் உதவியாளராக பணிபுரிந்த பிரவீன் இசையமைக்க உள்ளார்.
சாஜி சலீமின் இரண்டாவது படமான ‘லாந்தர்’ படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாகும். இதுகுறித்து சாஜி சலீம் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் “இது புதுமையான கதைக்களத்தில் உருவாகக்கூடிய சஸ்பென்ஸ் திரில்லர் படம் . இதுவரை யாரும் சொல்லாத சஸ்பென்ஸ் இந்த படத்தில் இருக்கும். பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் இந்த படத்தில் பஞ்சம் இருக்காது. எனது முதல் படம் வெளியாகும் முன்பே என் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர் பத்ரி அவர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.