கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விதார்த். அதைத்தொடர்ந்து இவர் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதன்படி குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது விதார்த் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதன்படி சமரன், லாந்தர் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் கடைசியாக விதார்த் நடிப்பில் குய்கோ திரைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் நடிகர் விதார்த், ரவி முருகையா இயக்கத்தில் ஆயிரம் பொற்காசுகள் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விதாரத்துடன் இணைந்து சரவணன், ஜார்ஜ் மரியான், அருந்ததி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜோகன் இசையமைத்துள்ள இந்த படத்தை கே ஆர் நிறுவனத்தின் சார்பில் ஜி. ராமலிங்கம் தயாரித்துள்ளார். இப்படம் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியானது. அதே சமயம் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படமும் ஷாருக்கான் நடிப்பில் வெளியான டங்கி திரைப்படமும் திரையிடப்பட்ட நிலையில் இந்த இரண்டு படங்களும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவில் வரவேற்பு பெறவில்லை. எனவே முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த ஆயிரம் பொற்காசுகள் திரைப்படம் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆகையால் ஆயிரம் பொற்காசுகள் திரைப்படத்திற்காக கூடுதல் திரையரங்குகளும் காட்சிகளும் தமிழகத்தில் பல இடங்களில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் இயக்குனர் ஆயிரம் பொற்காசுகள் படத்திற்காக ஒரு டிக்கெட் வாங்கினால் இன்னொரு டிக்கெட் இலவசம் என்ற கான்செப்ட்டை ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.