தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்). இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். படத்தில் நடிகர் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடிக்க அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும் மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரியும் நடித்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து லைலா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மைக் மோகன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்க சித்தார்த்தா நுனி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி வருகின்ற செப்டம்பர் 5 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரைக்கு வர இப்படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி வந்தன.
சமீபத்தில் இதன் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்நிலையில் விஜய் மற்றும் தி கோட் பட குழுவினர், சென்னையில் உள்ள மறைந்த நடிகர் விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்று பிரேமலதா விஜயகாந்திடம் நன்றி தெரிவித்துள்ளனர்.
அதாவது ஏற்கனவே வெளியான தகவலின் படி, கோட் படத்தில் நடிகர் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அதற்கு அனுமதி வழங்கிய பிரேமலதா விஜயகாந்திற்கு விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் நேரில் சென்று நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும் நடிகர் விஜய், விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் குடும்பத்தினருடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் இவர்களுடைய சந்திப்பு அரசியல் கூட்டணிக்கு அச்சாரமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக வலம் வரும் நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிட இருக்கிறார். ஆதலால் அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைக்க போவதாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் தற்போது பிரேமலதா விஜயகாந்தை, நடிகை விஜய் சந்தித்தது அரசியல் தொடர்பான சந்திப்பாக இருக்கலாம் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.