விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்குத் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் கீதகோவிந்தம், அர்ஜுன் ரெட்டி போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். அந்த வகையில் இவருக்கு பல பெண் ரசிகைகள் இருக்கிறார்கள். இவர் கடைசியாக குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஃபேமிலி என்டர்டெயினர் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அடுத்ததாக விஜய் தேவரகொண்டா ஃபேமிலி ஸ்டார் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை கீதகோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் பெட்லா இயக்கியிருந்தார். இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்திருந்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருந்த இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருந்தார். கே யு மோகனன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் கடந்த ஏப்ரல் 5ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. ஆனால் படமானது எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் வெளியான 20 நாட்களிலேயே
(ஏப்ரல் 26) நாளை அமேசான் பிரைமில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.