Homeசெய்திகள்சினிமாகாமராஜர் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய மக்கள் இயக்கம்... விஜயின் அடுத்த அதிரடி கட்டளை!

காமராஜர் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய மக்கள் இயக்கம்… விஜயின் அடுத்த அதிரடி கட்டளை!

-

திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பது தவிர்த்து விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இதன் மூலம் விஜய் அரசியலில் கால் பதிக்க தொடங்கி விட்டார் என்று அடிக்கடி சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் கடந்த மாதம் விஜய், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார். அத்துடன் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். மாணவர்கள் ஒவ்வொருவரும் படிப்பை தாண்டி நற்குணங்களையும் சிந்தனை திறன்களையும் வளர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மேலும் அம்பேத்கர்,பெரியார், காமராஜர் ஆகியவர்களை பற்றி படித்து தெரிந்து கொள்ளுமாறும் அறிவுரை வழங்கினார்.

சமீபத்தில் விஜய் லியோ படப்பிடிப்பை நிறைவு செய்த அடுத்த நாளே விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஏற்கனவே அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தியது போல காமராஜர் சிலைக்கும் மரியாதை செலுத்துமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு, பேரணியாகச் சென்று பெருந்தலைவர் திரு. காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சென்னை புறநகர் மாவட்டம், இளைஞர் அணி, தொண்டர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, தொகுதி, ஒன்றியம், நகரம், வட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக நெல்லை மாநகர் பகுதியில், இளைஞர் அணி சார்பில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், “கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் வழியில் நாளைய தலைமுறையை வழிநடத்தும் நாளைய முதல்வரே” என்ற அரசியல் வசனங்களும் இடம்பெற்றுள்ளது. தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ