விஜய் சேதுபதி நடித்துள்ள 51-வது திரைப்படம் சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில், 5 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால், அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியது. மொத்த படப்பிடிப்பும் மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
படப்பிடிப்பை நிறைவு செய்து சென்னை திரும்பிய படத்தின் இயக்குநர் படம் தொடர்பாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, இத்திரைப்படம் சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகி உள்ளதாக கூறியுள்ளார். மலேசியாவில் சூதாட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதை மையமாக மைத்து படத்தை இயக்கியுள்ளேன். பகை, மோசடி மற்றும் கடன் ஆகியவற்றின் பின்னணியில் கதை நகரும் என தெரிவித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் அனைத்து காட்சிகளிலும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். படத்தின் 70 நாட்கள் படப்பிடிப்பில் 53 நாட்கள் யோகிபாபு பங்கேற்றார் என இயக்குநர் தெரிவித்துள்ளார். இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.