சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சிவா தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவருடைய முதல் படமே இவருக்கு வெற்றிப் படமாக அமைய அதிலிருந்து இவர் அனைவராலும் சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டு வருகிறார். இதைத்தொடர்ந்த இவர், வேதாளம், வீரம், விவேகம், அண்ணாத்த ஆகிய படங்களை இயக்கினார். கடைசியாக இவரது இயக்கத்தில் கங்குவா திரைப்படம் வெளியானது. சூர்யாவின் நடிப்பில் உருவாகியிருந்த இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் சரிவை சந்தித்தது. இதைத்தொடர்ந்து சிறுத்தை சிவா, கங்குவா 2 படத்தை இயக்கப் போவதாகவும், அஜித் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு சிறுத்தை சிவா அப்செட்டாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் சேதுபதியும், சிறுத்தை சிவாவும் புகழ்பெற்ற கோயில் ஒன்றில் சந்தித்து நீண்ட நேரம் பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே இவர்கள் புதிய படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இனிவரும் நாட்களை இவர்களது கூட்டணியில் புதிய படம் உருவாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் விஜய் சேதுபதி தற்போது ட்ரெயின், ஏஸ், காந்தி டாக்ஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.