ஆர். ரவிக்குமார் தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர். டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ஆர். ரவிக்குமார் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இருப்பினும் இந்த படம் பல வருடங்கள் கிடப்பில் போடப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் திரையிடப்பட்டது. சயின்ஸ் பிக்சன் ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து கிட்டத்தட்ட 50வது கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்ததாக ஆர் ரவிக்குமார் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் 2 திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் படமானது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இதற்கிடையில் இவர், நடிகர் சூர்யாவை இயக்கப் போவதாகவும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலா வந்தன. இந்நிலையில் தான் நடிகர் விஜய் சேதுபதி, ஆர். ரவிக்குமாரை சந்தித்து பாசிட்டிவான வார்த்தைகளை கூறியுள்ளதாகவும் விரைவில் இவர்களது காம்போவில் புதிய படம் உருவாகும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
நடிகர் விஜய் சேதுபதி மகாராஜா படத்தை தொடர்ந்து ட்ரெயின், ஏஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.