விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மூன்று படங்களும் ஒரே மாதத்தில் வெளியாக இருக்கிறது என அப்டேட் வெளிவந்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். இவரது 50வது படமாக வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் விடுதலை 2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அடுத்தது விஜய் சேதுபதியின் நடிப்பில் ஏஸ், ட்ரெயின் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. மேலும் விஜய் சேதுபதி, கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகளும் ஏறத்தாழ நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ஏஸ் திரைப்படத்தை 2025 மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. அடுத்தது மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ட்ரெயின் திரைப்படம் 2025 மார்ச் மாதத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அப்படி இந்த படம் மார்ச் மாதத்தில் திரைக்கு வரவில்லை என்றால் மே மாதத்திற்கு தள்ளிப்போகும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தினையும் மே மாதத்தில் கொண்டுவர இருப்பதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. இவ்வாறு விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் மூன்று படங்கள் 2025 மே மாதத்தில் வெளிவர உள்ள தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்தாலும் ஒரே மாதத்தில் எப்படி மூன்று படங்களும் வெளியாகும்? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.