விஜய் சேதுபதி ஹீரோவாக ஒரு பக்கம் நடித்தாலும் வில்லனாக இன்னொரு பக்கம் மிரட்டி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதேசமயம் பாலிவுட்டில் மெரி கிறிஸ்மஸ் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதைத்தொடர்ந்து தமிழில் மகாராஜா, VJS 51 போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார் விஜய் சேதுபதி. மேலும் மிஷ்கின் இயக்கி வரும் ட்ரெயின் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் காத்தான் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதன் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு தொடர்ந்து தமிழ், இந்தி என பல படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி நலன் குமாரசாமி இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி கார்த்தி 26 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு நலன் குமாரசாமி விஜய் சேதுபதியை இயக்குவார் என்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே நலன் குமாரசாமி நடிப்பில் விஜய் சேதுபதி சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.