சுட்டிகள் முதல் பெரியவர்கள் வரை விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கோலிவுட் மட்டுமன்றி டோலிவுட், சாண்டல்வுட், மோலிவுட் என விஜய்க்கு அனைத்து திரையுலகிலும் ரசிகர்கள் ஏராளம். விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான லியோ, சுமார் 600 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய ஹிட் அடித்தது.
லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, தி கோட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த் மற்றும் பிரபுதேவா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரேம்ஜி உள்பட வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நாயர்களும் படத்தில் இணைந்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் அமெரிக்கா, தாய்லாந்து, இத்தாலியில் நடைபெற்றது. முதல் கட்ட படப்பிடிப்பு அங்கு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுவையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக கோட் படக்குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர். அங்கு அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது.