தி கோட் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் இப்படம் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் சித்தார்த்த நுனியின் ஒளிப்பதிவிலும் தயாராகி இருக்கிறது. பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 5, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து பாடல்களும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரெய்லரின் மூலம் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜயின் பெயர் காந்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் ட்ரைலரில் ஆக்சன் காட்சிகளும், கார் சாகச காட்சிகளும் காட்டப்படுகின்றன. நடிகர் மைக் மோகன் வில்லனாக நடித்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களை எதிர்பார்த்த அளவில் கவரவில்லை என்றாலும் இந்த ட்ரெய்லர் நிச்சயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது நிச்சயம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்ற வைப் தெரிகிறது. அதிலும் “LION IS ALWAYS A LION” என்ற வசனம் கூஸ்பம்ப்ஸ் தருகிறது. அந்த அளவிற்கு தரமான சம்பவமாக வெளிவந்துள்ளது இந்த ட்ரெய்லர். எனவே விஜய் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக அமைந்துள்ளது.