கேப்டன் விஜயகாந்த் பற்றி தெரியாத சில தகவல்களை விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும் பிரபல தயாரிப்பாளருமான K. விஜயகுமார் நமது ஏபிசி நியூஸ் தமிழ் (APC NEWS TAMIL) நிறுவனத்திற்கு பகிர்ந்துள்ளார்.
புரட்சிக் கலைஞர், கேப்டன் என்று அன்று முதல் இன்று வரை கொண்டாடப்படும் விஜயகாந்த் திரைத்துறையில் பெரும் பங்காற்றியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அதன்படி இவர் நடிகர் சங்கத்தை கடன் பிரச்சனையில் இருந்து மீட்டெடுத்தவர். சினிமா வாய்ப்புகள் தேடி வரும் புது முக நடிகர்களாக இருந்தாலும் சரி, இயக்குனர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு தோள் கொடுத்து உறுதுணையாக நின்றவர். இவ்வாறு பல விஷயங்கள் விஜயகாந்த் பற்றி நமக்கு தெரிந்திருந்தாலும் தெரியாத சில விஷயங்களும் இருக்கின்றன.
இது குறித்து சில தகவல்களை விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும் பிரபல தயாரிப்பாளருமான K. விஜயகுமார் நமக்கு பகிர்ந்துள்ளார். அதாவது பல வருடங்களுக்கு முன்பாக திரைப்படத்திற்கு தயாரிப்பாளர்கள் கட்ட வேண்டிய 45 சதவீத கேளிக்கை வரி (Entertainment Tax) பிரச்சனையில் நடிகர் விஜயகாந்த், தலையிட்டு அப்போதைய முதல்வர் கலைஞரிடம் பேசி 45 சதவீத வரியை 30 சதவீதமாக குறைத்து தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் லாபம் பெற வழிவகை செய்தார். அத்துடன் திருட்டு விசிடி போன்ற பிரச்சனைகளிலும் தலையிட்டு கலைஞரிடம் இது தொடர்பான விளைவை எடுத்துக் கூறி திருட்டு விசிடி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தாராம். அதிலும் குறிப்பாக, சிவாஜி கணேசனின் மறைவின்போது எமோஷனலான விஜயகாந்த், சிவாஜியை என் அப்பா மறைந்து விட்டார் என்று சொன்ன விஷயத்தையும் தயாரிப்பாளர் விஜயகுமார் பகிர்ந்துள்ளார்.
இதுபோன்று தனக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் பல்வேறு வழிகளில் உதவி செய்துள்ளார் விஜயகாந்த். அதே சமயம் சினிமாவில் முழு அர்ப்பணிப்புடனும் பணியாற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஆக்சன் காட்சி என்று வந்துவிட்டாலே இறங்கி சிக்சர் அடிப்பவர் தான் விஜயகாந்த். அதனாலயே இவர் கேப்டன் என்ற பெயரையும் பெற்றார். மேலும் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் சிங்கம் வேட்டையாடுவதை போல கம்பீரமாக எதிரிகளை பந்தாடுவார். அந்த வகையில் பெரும்பாலான ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் தன் உயிரை பணயம் வைத்து நடித்து படக்குழுவினரை மிரள செய்து விடுவார் என்பதை தமிழ் திரைத்துறையினர் அனைவரும் அறிந்ததே. அதே போல் எல்லை தாண்டி வெளிநாட்டு கலைஞர்களையும் பிரமிக்க வைத்துள்ளார் விஜயகாந்த்.
அதன்படி கடந்த 1998 இல் வெளியான உளவுத்துறை திரைப்படத்தில் கடலுக்கு
அடியில் நடக்கும் காட்சி ஒன்றை படமாக்க படக்குழு, லண்டன் சென்றுள்ளது. அப்போது ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு பணியாற்றிய டூப் கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் உளவுத்துறை திரைப்படத்திலும் பணியாற்ற வந்துள்ளனர். அந்த நேரத்தில் விஜயகாந்த் தண்ணீருக்கு அடியில் 15 அடி ஆழத்திற்கு டூப் இல்லாமல், தானே இறங்குவதாக சொல்லி தைரியமாக இறங்கினாராம். பொதுவாக இதுபோன்ற ரிஸ்க்கான காட்சிகளில் கதாநாயகன் 5 அடி மட்டுமே இறங்குவாராம். அதன் பிறகு அவர்களுக்கு பதிலாக டூப் கலைஞர்கள் தான் இறங்குவார்களாம். ஆனால் விஜயகாந்த் டூப் இல்லாமல் 15 முதல் 20 அடி ஆழத்திற்கு இறங்கியதைப் பார்த்த ஹாலிவுட் கலைஞர்கள், தயாரிப்பாளர் விஜயகுமாரிடம், இந்த ஆளை எங்கிருந்து பிடித்து வந்தீர்கள்? என்று கேட்டனராம். அதற்கு தயாரிப்பாளர் விஜயகுமார், அவர் தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ என்றாராம். அதற்கு டூப் கலைஞர்கள், விஜயகாந்த் டூப் இல்லாமல் நடிப்பதை பார்த்து பிரமித்து, இவர் தான் ரியல் ஹீரோ. இவரை போல வேறு எந்த ஹீரோவையும் நாங்கள் பார்த்ததில்லை என்றனராம். இவ்வாறு கேப்டன் விஜயகாந்த் சினிமாவிற்காக அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என்பதை பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் விஜயகுமார்.