தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 இல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரின் மறைவு தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது வரையிலும் ரசிகர்களும் தொண்டர்களும் திரை பிரபலங்களும் விஜயகாந்தின் சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பலரும் வெளிநாடுகளில் இருந்த காரணத்தால் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது. சென்னை திரும்பிய பின் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் சிவகுமார், கார்த்தி, சூர்யா, அருண் விஜய், புகழ் உள்ளிட்டோர் விஜயகாந்த் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அந்த வரிசையில் தற்போது நடிகர் ஜெயம் ரவியும் சூடம் ஏற்றி
அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதை தொடர்ந்து பேசிய ஜெயம் ரவி, ” குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே என் அப்பா, விஜயகாந்த்தை பார், அவரை மாதிரி வரவேண்டும் என்று கூறுவார். அவர் ஒரு நல்ல மனிதர். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என எல்லாருக்கும் உதவிகளை செய்தவர். சினிமா சம்பந்தமாக எனக்கு ஊக்கம் கொடுத்தவர். நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது எனக்கு சந்தோஷம் தான். என்னைப் பொறுத்தவரை அது தான் நியாயம். இது தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் விரைவில் முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.