நடிகர் சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் தற்போது இளம் நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் சரத்குமார். அடுத்ததாக இவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார்.
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து படைத்தலைவன் எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் சண்முக பாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பொன்ராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப்போவதாக செய்திகள் கசிந்திருந்தது. அதன்படி தற்போது சண்முக பாண்டியனின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சண்முக பாண்டியன் உடன் இணைந்து நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார். பூஜையுடன் தொடங்கிய இந்த படம் தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.