நடிகர் விஜய் கடந்தாண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் அப்பா- மகன் என இரட்டை வேடங்களில் நடிக்க அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரியும் நடித்துள்ளனர். மேலும் விஜய்க்கு நண்பர்களாக பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் வில்லனாக மைக் மோகன் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது 2024 செப்டம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் படத்தின் முன்னோட்ட வீடியோவையும் அடுத்தடுத்த பாடல்களையும் பட குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் ஸ்பார்க் எனும் மூன்றாவது பாடல் இன்று (ஆகஸ்ட் 3) மாலை 6 மணி அளவில் வெளியாக இருக்கிறது. அதே சமயம் நடிகர் விஜய், கட்சி மாநாடு போன்ற அரசியல் தொடர்பான வேலைகளில் பிஸியாக இருப்பதால் படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. எனவே இந்த படத்தின் டிரைலர் வருகின்ற ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியாகும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.