நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் புரட்சித்தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது நடிப்பில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக உருவாகியிருந்த மதகஜராஜா திரைப்படம் பல தடைகளை தாண்டி கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவரப்பட்டது. சுந்தர். சி இயக்கத்தில் விஷால், சந்தானம் கூட்டணியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. காமெடி கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படத்தை ரசிகர்கள் பலரும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
அந்த வகையில் பொங்கலுக்கு ஏகப்பட்ட படங்கள் வெளியானாலும் மதகஜராஜா திரைப்படம் தான் பொங்கல் வின்னர் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் படக்குழு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த விழாவில் சுந்தர்.சி, விஷால், அஞ்சலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஷால் தன்னுடைய லைன் அப் குறித்து அறிவித்துள்ளார். அதன்படி துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி நடிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும், டிமான்ட்டி காலனி பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவித்துள்ளார். இது தவிர மார்க் ஆண்டனி 2, இரும்புத்திரை 2 போன்ற படங்களும் விஷாலின் லைன் அப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் விஷாலின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -