பிரபல இயக்குனர் ஹரி கமர்சியல் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர். இவர் விஷால் நடிப்பில் தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷால் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார் இயக்குனர் ஹரி. இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படத்திற்கு ரத்னம் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் நிறுவனமும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே ரத்னம் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படமானது ஏப்ரல் 26 அன்று உலகம் முழுவதும் படியாகும் என்று பட குழுவினர் அறிவித்திருந்தனர். இதற்கிடையில் படத்தின் பர்ஸ்ட் லுக் அதை தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக படத்தின் டிரைலரை வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். அதன்படி தமிழ் புத்தாண்டு தினமான நாளை (ஏப்ரல் 14) ரத்னம் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் முதல் பாடல் நாளை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ரத்னம் பட குழுவினர் கோட் படத்துக்கு போட்டியாக ட்ரைலரை களமிறக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.