விஷாலின் மதகஜராஜா திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகராவார். இவரது நடிப்பில் கடைசியாக ரத்னம் திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து இவர் துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி 2, இரும்புத்திரை 2 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், சுந்தர். சி இயக்கத்தில் மதகஜராஜா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை ஜெமினி ஃபிலிம் சர்கியூட் நிறுவனம் தயாரிக்க விஜய் ஆண்டனி இந்த படத்திற்கு இசைய வைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 12 வருடங்களுக்கு முன்பாகவே நிறைவடைந்து 2013 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகும் சில முறை புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த படம் 12 வருடங்களாக ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.