வணங்கான் படக்குழு பொங்கலுக்கு வருவதை உறுதி செய்துள்ளது.
அருண் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு (2024) பொங்கல் தினத்தை முன்னிட்டு மிஷன் சாப்டர் 1 எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி அருண் விஜய் நடிப்பில் வணங்கான் எனும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தினை இயக்குனர் பாலா இயக்க சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க சாம் சி எஸ் இந்த படத்தின் பின்னணி இசைக்கான பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் அகியவை ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏக்கசக்கமாக அதிகப்படுத்தி உள்ளது. அடுத்தது இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே முதல் பாடல் வெளியான நிலையில் இன்று (டிசம்பர் 30) இரண்டாவது பாடல் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு கேம் சேஞ்சர், விடாமுயற்சி போன்ற பெரிய படங்கள் வெளியாகும் காரணத்தால் வணங்கான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படும் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் வணங்கான் திரைப்படம் பொங்கலுக்கு வருவதை மீண்டும் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.