லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது டாக்ஸிக், ராக்காயி, தி டெஸ்ட், டியர் ஸ்டுடென்ட்ஸ், மண்ணாங்கட்டி என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் வெளியானது. அதற்கு முன்னதாக நானும் ரெளடி தான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷுக்கும் நயன்தாராவிற்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் நானும் ரெளடி தான் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை திருமண ஆவணப்படத்தில் பயன்படுத்தியதற்காக தனுஷ் ரூ. 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மேலும் தனுஷ் இது தொடர்பாக நீதிமன்றத்தில் நயன்தாராவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து நடிகை நயன்தாராவிற்கு மீண்டும் ஒரு புதிய சிக்கல் வந்துள்ளது. அதன்படி சந்திரமுகி படத்தின் சில காட்சிகளை நடிகை நயன்தாரா தன்னுடைய திருமண ஆவணப்படத்தில் அனுமதி இன்றி பயன்படுத்தி இருப்பதாகவும் இதற்காக நடிகை நயன்தாரா ரூ. 5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷ் விவகாரத்தில் நயன்தாரா என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் உலா வரும் நிலையில் தற்போது எழுந்துள்ள புதிய பிரச்சனையை அவர் எப்படி சமாளிக்க போகிறார் என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.