தனுஷின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகியுள்ள ராயன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பவர் பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து 5 வருடங்கள் கழித்து ராயன் என்ற திரைப்படத்தை இயக்கி தானே அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமானின் இசையிலும் இந்த படம் உருவாகி இருந்தது. கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருந்த இந்த படம் நேற்று (ஜூலை 26) திரையிடப்பட்டது. இந்த படத்தில் தனுஷுக்கு மூத்த தம்பியாக காளிதாஸ் ஜெயராம் நடிக்க இளைய தம்பியாக சந்தீப் கிஷன் நடித்திருந்தார். இவர்களுக்கு தங்கையாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். படத்தில் வில்லன்களாக எஸ் ஜே சூர்யாவும் சரவணனும் நடித்திருந்தனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. எனவே இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் இந்திய அளவில் 12 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இனிவரும் நாட்களிலும் இந்த படம் ரசிகர்களை கவர்ந்து வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.