கடந்த 2017 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் ரங்கூன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனின் 21 வது படமாக உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் நிறைவடைய உள்ளது. அதே சமயம் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் டீசரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதன்படி இந்த படத்திற்கு அமரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. ஏற்கனவே இந்த படம் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ராணுவத்தின் பின்னணியில் உருவாகி வருவதாக செய்திகள் வெளிவந்ததன்படி இந்த படத்திற்கு போர்க்களத்தில் சிங்கம், சோல்ஜர் போன்ற தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக இந்த படத்திற்கு அமரன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் அமரன் என்ற தலைப்பினால் சற்றுக் குழப்பத்தில் இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் கடந்த 1992 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தின் தலைப்பை சுட்டுவிட்டார்கள் எனவும், அது ப்ளாப்பான படம் எனவும், அதன் தலைப்பை இந்த படத்திற்கு வைத்திருக்கிறார்கள் எனவும் சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இது குறித்து படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் நடந்த பேட்டியில், “இந்த படத்தின் கதையை எழுத தொடங்கும் போதே அமரன் என்று எழுதிவிட்டு தான் தொடங்கினேன். ஏனென்றால் அமரன் என்பதற்கு அழிவில்லாதவன் என்று அர்த்தம். அதனால் இந்த படத்திற்கு அமரன் என்ற டைட்டில் பொருத்தமானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.