கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் டிமான்ட்டி காலனி திரைப்படம் வெளியானது. அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான ஹாரர் படங்களில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது இந்த டிமான்ட்டி காலனி.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜய் ஞானமுத்து, அருள்நிதி கூட்டணியில் டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ஞான முத்து பட்டறை, ஒயிட் நைட் என்டர்டெயின் மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் அருள் நிதியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து இதன் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. இருப்பினும் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு எதுவும் படக்குழுவினர் சார்பில் வெளியிடப்படவில்லை. ரசிகர்கள் அனைவரும் டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தை 2024 ஏப்ரல் 14 ஆம் நாளில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பின்னரே படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.