சர்தார் 2 திரைப்படம் ஜூலை மாதத்தில் திரைக்கு வரும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான கார்த்தி கடந்த 2022 ஆம் ஆண்டு சர்தார் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். பி.எஸ். மித்ரன் இயக்கியிருந்த இந்த படம் ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. எனவே அதைத்தொடர்ந்து பி.எஸ். மித்ரன், கார்த்தி கூட்டணியில் சர்தார் 2 திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். பிரின்ட்ஸ் பிச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி பூந்தமல்லியில் பிரம்மாண்ட சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதில் கார்த்தி – எஸ்.ஜே. சூர்யா ஆகிய இருவருக்குமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்த படத்தை 2025 ஜூலை மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரிய வந்திருக்கிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.