சென்னையில் இடைத்தரகர் என பொது இடங்களில் தன்னை அறிமுகப்படித்திக் கொண்டு முதியவர்களை குறிவைத்து நூதன முறையில் ஏமாற்றிய பணத்தில் விலைமாதர்களுடன் ஜாலியாக இருப்பதை வழக்கமாக கொண்டவராம் முருகன். இதுவரை 5 பெண்களை திருமணம் செய்துள்ள மோசடி மன்னன் கைது. சென்னை நகரில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சென்னை வடபழனி கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபால் வயது 75.ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 13ம் தேதி வடபழனி முருகன் கோவில் அருகே நின்று டீ குடித்துக் கொண்டிருந்தபோது, ரியல் எஸ்டேட் தரகர் கோடம்பாக்கம் முருகன் என ஒரு நபர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர் தனக்கு நன்கு அறிமுகமானவர் எனவும், சென்னை புறநகர் பகுதியில் 100 ஏக்கர் நிலம் வாங்க போகிறார்.
அதேபோல சென்னை நகருக்குள் ஏதாவது காலிஇடம் இருந்தாலும் சொல்லுங்கள் அதையும் வாங்கிக்கொள்வார். உங்களுக்கு நல்ல கமிஷன் வாங்கி தருகிறேன் என நம்பும்படி பேசியுள்ளார். இந்த நிலையில் கடந்த 14ம் தேதி நகைக் கடை உரிமையாளரை சந்தித்து இடம் தொடர்பாக பேசுவோம் என தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலைக்கு முதியவர் கோபாலை அழைத்துச் சென்றுள்ளார்.
கடை வாசல் அருகே சென்றபோது, தான் அணிந்திருந்த இரண்டு மோதிரங்களை கழற்றி முதியவர் கோபாலிடம் முருகன் கொடுத்துள்ளார். நம்மை வாழ வைக்கும் முதலாளியை பார்க்க செல்லும் போது, பந்தாவாக போகக்கூடாது. இவற்றை வைத்திருங்கள் என கூறியுள்ளார். பிறகு உங்கள் கையில் என்ன அழுக்கான தங்க மோதிரத்தை அணிந்து இருக்கிறீர்கள். அதை கொடுங்கள் உள்ளே சென்று பாலிஸ் போட்டு எடுத்து வருவதுடன், முதலாளி ப்ரீயா இருக்கிறாரா என பார்த்துவிட்டு வருகிறேன் என நம்பும் படி பேசி 5 கிராம் மோதிரத்தை வாங்கி சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் முருகன் வராததால் சந்தேகம் அடைந்த முதியவர் கோபால் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. முருகன் கொடுத்த மோதிரங்களை அருகில் உள்ள நகைக்கடையில் கொண்டு போய் காட்டியபோது அவை கவரிங் என தெரிய வந்தது.அப்போது தான் தன்னை முருகன் ஏமாற்றி விட்டார் என தெரியவந்தது .இது தொடர்பாக முதியவர் கோபால் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது கோபாலிடம் கைவரிசை காட்டியது, முதியவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடும் திருவண்ணாமலையை சேர்ந்த முருகன்(50) என்பது தெரியவந்தது. கோடம்பாக்கத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, வளவனூர் திண்டிவனம், சென்னை நகரில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இவருடைய முதல்மனைவி ராஜேஸ்வரி தீ விபத்தில் இறந்து விட்டார். அவர் மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளையும் நிற்கதியாக விட்டுவிட்டாராம். ஊர் ஊராக சென்று மோசடியில் ஈடுபட்டு அந்த பணத்தில் விலைமாதர்களுடன் ஜாலியாக இருப்பதை வழக்கமாக கொண்டவராம் முருகன் .