வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவன் உட்பட 3 பேர் கைது
கோவை தொண்டாமுத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற வட மாநில தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவன் உட்பட மூன்று பேரை தொண்டாமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.
அசாம் மாநிலம் பிரம்மாபிலை சேர்ந்தவர் ரஹிபுல் உசேன் (21). இவர் கோவை தொண்டாமுத்தூர் குபேரபுரி பகுதியில் தனது சகோததருடன் தங்கி டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு ரஹிபுல் உசேன் தனது சகோததரர் முகமது பைசலுடன் கடைச் சென்று மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு மீண்டும் அறைக்குச் செல்ல சாலையில் நடந்து சென்றனர்.
அப்போது மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மூன்று பேர் ரஹிபுல் உசேனிடம் தகராறு செய்து அவதூறாக பேசி தாக்கியுள்ளனர். அப்போது சந்ரு என்ற இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஹிபுல் உசேனை குத்தினார். இதில் அவர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து 3 பேரும் தப்பினர். இதையடுத்து அங்கிருந்தவர் வட மாநில தொழிலாளியை கத்தியால் குத்திய ஆலாந்துறையை சேர்ந்த சந்ரு (19), மற்றும் 16 வயது சிறுவனை மடக்கி பிடித்து தொண்டாமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து காயமடைந்த ரஹிபுல் உசேன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற தொண்டாமுத்தூரை சேர்ந்த அருண்குமார் (20) என்பவரையும், போலீசார் மடக்கி பிடித்தனர். கைது செய்யப்பட்ட சந்ரு மீது பள்ளி மாணவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிட தக்கது.