Homeசெய்திகள்க்ரைம்கொலையாளிகளுக்கு வெடிகுண்டு தந்த 3 பேர் சிக்கினர்

கொலையாளிகளுக்கு வெடிகுண்டு தந்த 3 பேர் சிக்கினர்

-

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு வெடிகுண்டுகள் வாங்கி கொடுத்த, மாநகராட்சி துாய்மை பணியாளர் மற்றும் சகோதரர்கள் இருவர் என, மூவர் கைது செய்யப்பட்டனர்.

கொலையாளிகளுக்கு வெடிகுண்டு தந்த 3 பேர் சிக்கினர்பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், 52, கொலை வழக்கில் ரவுடிகள், வழக்கறிஞர்கள், போலீஸ் எஸ்.ஐ., மகன் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

இவ்வழக்கில், தனிப்படை போலீசார், சென்னை கோடம்பாக்கம் பூபதி நகர் முகிலன், 32; காமராஜர் நகர் விஜயகுமார், 21; விக்னேஷ், 27, என்ற மூவரை நேற்று கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

விஜயகுமார், விக்னேஷ் இருவரும் சகோதரர்கள். முகிலன், சென்னை மாநகராட்சியில் துாய்மை பணியாளர். மூவரும், வடசென்னையைச் சேர்ந்த ரவுடி சம்பவ செந்திலின் கூட்டாளிகள். ஆம்ஸ்ட்ராங் கொலை சதியில் வெடிகுண்டுகள் வீசும் திட்டமும் இருந்துள்ளது. இதற்காக, சம்பவ செந்தில், தன் கூட்டாளியான ராஜேஷ் என்பவரிடம், மூன்றுக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை ஒப்படைத்துள்ளார்.

அந்த வெடிகுண்டுகளை, ராஜேஷிடம் இருந்து, விக்னேஷ், விஜயகுமார், முகிலன் ஆகியோர் வாங்கி, சென்னை ஜாம்பஜாரை சேர்ந்த ரவுடி தோட்டம் சேகரின் மனைவியும், வழக்கறிஞருமான மலர்க்கொடியிடம் கொடுத்துள்ளனர்.

பின் அந்த வெடிகுண்டுகளை, மலர்க்கொடி தன் கூட்டாளியான, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரனிடம் ஒப்படைத்துள்ளார். இவர் வாயிலாகவே கொலையாளிகளுக்கு வெடிகுண்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கில், மலர்க்கொடி, ஹரிஹரன் ஏற்கனவே கைதாகி பூந்தமல்லி கிளைச் சிறையில் உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரையில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

MUST READ