பணம் இரட்டிப்பு மோசடி விவகாரத்தில் சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் இரண்டு நாட்களில் 60 பேர் புகார் கொடுத்துள்ளனர்.
மோசடி நிறுவனத்திலிருந்து கைப்பற்றப்பட்ட 12 கோடியே 65 லட்சம் ரூபாய், இரண்டரை கிலோ தங்கம் மற்றும் 13 கிலோ வெள்ளி ஆகியவை நீதிமன்ற உத்தரவுப்படி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி, முதலீடு செய்யும் பணத்திற்கு இரண்டு மாதத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ஆயிரக்கணக்கான பொதுமக்களிடமிருந்து 500 கோடி ரூபாய் வரை மோசடி செய்த விவகாரத்தில் அன்னை தெரசா நிறுவனத்தின் நிறுவன தலைவரான முன்னாள் பாஜக நிர்வாகி வேலூரை சேர்ந்த விஜயாபானு, துணை நிறுவனத் தலைவர் ஜெயப்பிரதா மற்றும் நிர்வாகி பாஸ்கர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு, நேற்று கோவையில் உள்ள பொருளாதார குற்றத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் திருமண மண்டபத்தில் குவித்து வைத்திருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை போலீசார் கைப்பற்றினர். போலீசாரின் சோதனையில் 12 கோடியே 65 லட்ச ரூபாய் ரொக்கப் பணமும், இரண்டரை கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி, அரிசி மற்றும் மளிகை பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை கோவை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்த போது, அதனை சேலம் கருவூலத்தில் பாதுகாப்பாக வைத்திட நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு வாகனங்களில் 10 இரும்பு பெட்டிகளில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று பிற்பகலில் கொண்டுவரப்பட்டு பின்னர் கருவூலத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
இதனிடையே பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் தருவதற்காக நான்கு போலீசார் கொண்ட தனி பிரிவு அமைக்கப்பட்டு, அங்கு புகார்களை பெற்று வருகின்றனர். சுமார் 5 ஆயிரம் பேர் அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு நாட்களில் 60 பேர் மட்டுமே புகார் செய்துள்ளனர். நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேலாக தவணைத் தொகையை முறையாக சரியான முறையில் செலுத்தி வந்ததால் பொதுமக்கள் புகார் தர தயங்கி வருகின்றனர்.
இந்நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பண இரட்டிப்பு தருவதாக மோசடி செய்த மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் பொதுமக்களிடம் இருந்து முதலீட்டை பெற்றுத் தந்த ஏஜெண்டுகள் குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து, அவர்களிடமும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.