கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 7 பேரை காவல்துறை கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் மால்பே பகுதியில் இருந்து வங்கதேசத்தை சேர்ந்த 7 பேரை காவல்துறை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து கடந்த 3 ஆண்டுகளாக உடுப்பியில் போலி ஆதார் அட்டையை கொண்டு வசித்து வந்துள்ளனர். இவர்களில் ஒருவரான முஹம்மது மாணிக், மங்களூரு விமான நிலையத்தில் இருந்து நேற்று துபாய்க்கு செல்ல முயன்றார்.
அப்போது விமான நிலையத்தில் இருந்த சுங்க மற்றும் குடியேற்றத்துறை அதிகாரிகள் போலியான ஆவணங்கள் மூலமாக பயணிக்கும் முயற்சியை கண்டுபிடித்தனர். உடனடியாக விமான நிலையத்தில் இருந்து அதிகாரிகள் உடுப்பி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அப்போது மாணிக் வங்கதேச பிரஜை என்பது தெரிய வந்தது. காவல்துறை நடத்திய கூடுதல் விசாரணையில் மாணிக் உடன் உடுப்பியில் தங்கியிருந்த மேலும் 6 வங்கதேச பிரஜைகளை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் வங்கதேசத்தில் இருந்து எப்படி இந்தியாவிற்குள் வந்தடைந்தனர், எப்படி போலி ஆவணங்களை தயாரித்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள 7 பேர் மீது பிஎன்எஸ் பிரிவு 319, 318, 336(3) மற்றும் 340 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், மத்திய பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
உடுப்பி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் அருண் குமார் கூறியதாவது..
மால்பே காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 7 வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் இருப்பதாகவும், அவர்களில் ஒருவரான முகமது மாணிக் என்பவர் மங்களூரு விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட் கொண்டு துபாய் செல்ல முயற்சித்தார், அவரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில், இந்த 7 பேரும் இங்கு சட்டப்பூர்வமாக 3 ஆண்டுகளாக வசித்து வருவது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் போலி ஆதார் அட்டை இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு போலி ஆதார் அட்டை எப்படி கிடைத்தது என்று விசாரணை நடத்தி வருகிறோம்.பிஎன்எஸ் பிரிவு 319,318,336(3) மற்றும் 340 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அனைவரும் போலீஸ் காவலில் உள்ளனர், விசாரணை நடந்து வருகிறது. விசாரணையை முடிந்த பிறகு நீதிமன்றத்தில் முழு அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளோம்.