துப்பட்டாவில் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி
தமிழகத்தில் கோயமுத்துர் மாவட்டத்தைச் சேர்ந்த பொள்ளாச்சி அருகே உள்ள கோலார்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் மிருதுளா (21). மிருதுளா பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மிருதுளா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திப்பம்பட்டியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியது. மிருதுளாவும், அப்துல் ரகுமானும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போன் மூலமாகவும் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக மிருதுளா அப்துல் ரகுமானுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அப்துல் ரகுமான் வாழ்க்கையில் விரக்தி அடைந்து கடந்த பிப்ரவரி மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அப்துல் ரகுமான் தற்கொலை செய்து கொண்டதற்கு தானே காரணம் என நினைத்து கடந்த சில நாட்களாக மிருதுளா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
எனவே மிருதுளா தன்னுடைய காதலன் சென்ற இடத்துக்கே செல்ல திட்டமிட்டார். சம்பவத்தன்று மாணவியின் தாய், தந்தை ஆகியோர் வெளியே சென்று இருந்தனர். வீட்டில் மாணவியின் பாட்டி மட்டுமே இருந்தார். அப்போது மிருதுளா தனது பாட்டியிடம் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளிக்க செல்வதாக கூறி விட்டு சென்றார். அங்கு மாணவி துப்பட்டாவில் தூக்குப்போட்டு தொங்கினார். இதனைப் பார்த்து அவரது பாட்டி அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கோலார்பட்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு மிருதுளாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.